சேவாலயாவானது ஏழை எளிய மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. மேலும் கிராமப்புற மக்களுக்காகவும் பல்வேறு மருத்துவமுகாம்கள் மற்றும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து வருகின்றது.
இதன் ஒருபகுதியாக நரிக்குறவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிகோலும் வகையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கடந்த நான்கு மாதங்களாக திருநின்றவூர், வேப்பம்பட்டு, பாக்கம், தாமரைபாக்கம் போன்ற பல்வேறு இடங்களில் குடியிருக்கும் நரிக்குறவர்களிடம் சேவாலயா ஊழியர்கள் சென்று அவர்களின் வாழ்க்கைதரம், கல்வி, போன்றவை பற்றி விசாரிக்கப்பட்டது. இதில் பல்வேறு குடும்பங்கள் குழந்தைகளை கொண்டு பிச்சையெடுப்பது கண்டறியப்பட்டது.
இத்துயரத்தை போக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் நரிக்குறவர்களின் வாழ்க்கையை முன்னேற்றவும் பிச்சையெடுப்பதை தடுக்கவும் அவர்களைக் கண்டறிந்து சேவாலயா மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் பல்வேறு வசதிகள் செய்து தர ஏற்பாடு செய்தார்.
இதில் முதற்கட்டமாக தாமரைப்பாக்கம், நடுகுத்தகை மற்றும் பாக்கம் கிராமங்களில் வசித்து வரும் 200 குடும்பங்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் புலியூர் அரசு மருத்துவமனை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இம்முகாமானது பாக்கம் கிழக்கு அரசு தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திரு. கொ.வீர் ராகவராவ் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் மக்களுக்கு ஈசிஜி, இரத்தபரிசோதனை, பல் மற்றும் சர்க்கரை நோய் போன்றவை பரிசோதிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பேசுகையில், “நரிக்குறவர்களாகிய நீங்களும் இந்நாட்டின் குடிமகன்களே. நீங்கள் அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும், பள்ளிக்கு அனுப்பாமல் குழந்தைகளை பிச்சையெடுக்க வைப்பதும் நீங்கள் பிச்சையெடுப்பதும் மிகவும் தவறானதாகும். நீங்கள் எப்போதும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் மேலும் குழந்தைகளை பள்ளிக்கு தினமும் அனுப்ப வேண்டும். அவ்வாறு நீங்கள் செய்தால் உங்களுக்குள் விழிப்புணர்வு ஏற்படும். அரசின் சலுகைகளையும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்து தருகிறேன்” என உறுதி கூறினார்.
இவ்விழாவில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.சையத் ரவூப், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சீனிவாசன், பாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.திருமஞ்சு அருள்தாஸ் மற்றும் புலியூர் அரசு மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக பாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் அனைவரையும் வரவேற்க சேவாலயா வளாகத்தலைவர் திரு.கிங்ஸ்டன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
சேவாலயாவுக்காக
வி.முரளிதரன்
(நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர்)